ஐதராபாத் :நியூசிலாந்து அணிக்கு எதிரான உலக கோப்பை கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் 95 ரன்கள் விளாசியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் வெள்ளைப் பந்து போட்டி தொடர்களில் 3 ஆயிரம் ரன்களை கடந்த முதல் வீரர் என்ற சிறப்பை இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி பெற்றார்.
13வது உலக கோப்பை கிர்க்கெட் திருவிழா இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இலங்கை, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நேற்று (அக். 22) நடைபெற்ற 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. விறுவிறுப்பாக நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 273 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
தொடர்ந்து விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா 46 ரன், சுப்மான் கில் 26 ரன் தங்கள் பங்குக்கு விளாச அடுத்து களமிறங்கிய இந்திய அணியின் ஆஸ்தான நாயகன் விராட் கோலி 95 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
48 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 274 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் விராட் கோலி 95 ரன்னும், பந்துவீச்சின் போது முகமது ஷமி 5 விக்கெட்டும் வீழ்த்திய இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தனர். இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி 10 ஓவர்களில் 54 ரன் கொடுத்து 5 விக்கெட்டுகளை கபளீகரம் செய்தார்.
ஒரு நாள் போட்டியில் அவர் இன்னிங்சில் 5 விக்கெட் எடுப்பது 3வது முறையாகும். ஹர்பஜன்சிங், ஜவஹல் ஸ்ரீநாத் ஆகியோருக்கு பிறகு 3 முறை 5 விக்கெட் எடுத்த இந்திய பவுலர் என்ற சாதனையை ஷமி படைத்தார். மேலும் உலகக் கோப்பை போட்டிகளில் முகமது ஷமி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 36 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்.
உலகக் கோப்பையில் அதிக விக்கெட் எடுத்த இந்திய வீரர்களின் பட்டியலில் 3வது இடத்தில் இருந்த அனில் கும்பிளேவை (31 விக்கெட்) பின்னுக்கு தள்ளி முகமது ஷமி இரண்டாவது இடத்தை பிடித்து உள்ளார். இந்த வகையில் முதல் இரு இடங்களில் ஜாகீர்கான், ஸ்ரீநாத் (தலா 44 விக்கெட்) உள்ளனர்.
அதேபோல், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி 5 ரன்னில் சதத்தை நழுவவிட்டார். அவர் மட்டும் சதம் அடித்து இருந்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் தெண்டுல்கரின் அதிக சதங்கள் சாதனையை சமன் செய்து இருப்பார். அதேநேரம் ஐசிசி நடத்தி வரும் வெள்ளைப் பந்து போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை கடந்தார்.
நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ரோகித் சர்மாவை பின்னுக்குத் தள்ளி விராட் கோலி முதலிடத்தை பிடித்தார். முதல் இரு இடங்களில் முறையே விராட் கோலி, ரோகித் சர்மா உள்ள நிலையில் 3வது இடத்தில் பாகிஸ்தான் விக்கெட் கீப்பர் முகமது ரிஸ்வான் (294 ரன்) உள்ளார்.
நடப்பாண்டில் அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற சாதனையையும் ரோகித் சர்மா படைத்து உள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் 18 இன்னிங்சில் 58 சிக்சர்கள் அடித்தார். 2019ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 15 இன்னிங்சில் 56 சிக்சர்கள் அடித்து இருந்தார். நடப்பு ஆண்டில் ரோகித் சர்மா இதுவரை 53 சிக்சர்கள் அடித்து உள்ளார்.
இதையும் படிங்க :Shubman Gill : அதிவேகமாக 2 ஆயிரம் ரன்களை கடந்து சாதனை! சுப்மான் கில் புது மைல்கல்!