சென்னை: 16வது ஆசியக் கோப்பை ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டி இன்று (செப்.17) நடந்தது. இதில் இந்திய அணி மிக எளிதாக இலங்கை அணியை வீழ்த்தி, தனது 8வது ஆசியக் கோப்பை கைப்பற்றியது. இந்திய அணி கடைசியாக 2018-இல் ஆசியக் கோப்பையை வென்றது. என்னதான் 6 முறை இலங்கை அணி ஆசியக் கோப்பையை வென்றிருந்தாலும், இந்த 2023-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பையை அவர்களால் மறக்க முடியாது. அவர்கள் மட்டும் அல்ல, கிரிக்கெட்டை உற்று நோக்கும் எவராலும் மறக்க முடியாத ஒன்றாக மாறி இருக்கிறது.
இப்படி ஒரு இறுதிப் போட்டி அமையும் என்று எவரும் நினைத்துக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். இதற்கு முக்கிய காரணம், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ். அவரது ஆக்ரோஷமான பந்து வீச்சால் இலங்கை அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரையும் வெளியேறச் செய்தார். இதனால் இலங்கை அணியால் வெறும் 50 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
ஒரு நாள் கிரிக்கெட்டில் மிக குறைந்த ஸ்கோர்:இலங்கை அணி ஒரு இன்னிங்ஸில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்த அணிகளின் பட்டியலில் 10வது இடத்தில் இடம் பிடித்துள்ளது. இது இலங்கை அணிக்கு ஒரு மோசமான சாதனை ஆகும். முன்னதாக ஜிம்பாப்வே அணி 35, அமெரிக்கா 35, கனடா 36, ஜிம்பாப்வே 38, இலங்கை 43, பாகிஸ்தான் 43, ஜிம்பாப்வே 44, கனடா 45, நமீபியா 45 ரன்களுடன் ஒரு மோசமான நிகழ்வுப் பட்டியலில் உள்ளனர்.
இதில் இலங்கை அணி இரண்டு முறை ஒருநாள் போட்டிகளில் மிகக் குறைந்த ஸ்கோரை எடுத்துள்ளது. ஒன்று 2012-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரானப் போட்டியில் 43 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது 2023 ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 50 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் சாதனைகள்:முகமது சிராஜ் இலங்கைக்கு எதிரான ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் 7 ஓவர்கள் வீசி, 21 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார். குறிப்பாக, அவர் வீசிய இரண்டாவது ஓவரில் 4 விக்கெட்டுகளை எடுத்து, ஒரே ஓவரில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் இந்தியர் என்ற சாதனையை படைத்தார். அதேபோல் குறைந்த பந்தில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சமிந்த வாஸுடன் இணைந்துள்ளார்.