தர்மசாலா :13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இதில் இமாச்சல பிரதேசம் தர்மசாலாவில் நடைபெற்று வரும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் விளையாடின. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சு தேர்வு செய்தார். நியூசிலாந்து அணியின் இன்னிங்சை டிவென் கான்வாய், வில் யங் ஆகியோர் தொடங்கினர்.
ஆரம்பமே பவுண்டரியுடன் தொடங்கி வில் யங் அதிரடி காட்ட, மறுபுறம் டிவென் கான்வாய் டக் அவுட்டாகி ஆட்டமிழந்தார். முகமது சிராஜ் பந்துவீச்சில் சிலிப்பில் நின்ற ஸ்ரேயாஸ் ஐயரிடம் கேட்ச் கொடுத்து டிவென் கான்வாய் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
8வது ஓவரில் மற்றொரு தொடக்க வீரர் வில் யங் (17 ரன்) முகமது ஷமி பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். அவரை தொடர்ந்து டேரில் மிட்செல் களமிறங்கி விளையாடி வருகிறார். இரண்டு முறை விக்கெட் கண்டத்தில் இருந்து தப்பிய ரச்சின் ரவீந்திரா அடித்து ஆடி இந்திய அணிக்கு குடைச்சல் கொடுத்தார்.
ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி அரைசதம் தாண்டியும் விளையாடி வந்த ரச்சின் ரவீந்திராவை ஒருவழியாக முகமது ஷமி ஆட்டமிழக்கச் செய்தார். ஷமி பந்துவீச்சில் சுப்மான் கில்லிடம் விக்கெட்டை பறிகொடுத்து ரச்சின் ரவீந்திரா (75 ரன்) வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய டாம் லாதம் நீண்ட நேரம் நீடிக்க வில்லை.
குல்திப் யாதவ் பந்துவீச்சில் கேப்டன் டாம் லாதம் (5 ரன்) எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார். மறுமுனையில் அடித்து ஆடிய டேரில் மிட்செல் சதம் அடித்தார். நிலைத்து நின்று விளையாடிய டேரில் மிட்செல் 130 ரன்களை கடந்து போது முகமது ஷமியின் பந்தில் விராட் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.