இந்தூர்: ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றது. அதன்படி கடந்த 11ஆம் தேதி முதல் போட்டி நடைபெற்று அதில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி இந்தூர் மைதானத்தில் இன்று (ஜன.14) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களான ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் ஆகியோர் முறையே 48, 8 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனைத் தொடர்ந்து களம் கண்ட வீரர்களில் குல்பாடின் நைப்பை தவிர்த்து மற்ற அனைவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
அஸ்மத்துல்லா உமர்சாய் 2, முகமது நபி 14, நஜிபுல்லா சத்ரன் 23, கரீம் ஜனத் 20, முஜீப் உர் ரஹ்மான் 21 ரன்களும் எடுத்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குல்பாடின் நைப் 35 பந்துகளில் 5 ஃபோர்கள், 4 சிக்சர்கள் உட்பட 57 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 172 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணியின் சார்பில் அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட்களும், ரவி பிஸ்னொய் மற்றும் அக்சர் பட்டேல் தலா 2 விக்கெட்களும், சிவம் துபே 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.