தர்மசாலா :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று தர்மசாலவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட 10 அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றன.
இதில் இமாச்சல பிரதேசம், தர்மசாலாவில் நடைபெறும் 21வது லீக் ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. நடப்பு தொடரில் இந்திய அணி இதுவரை எதிர்கொண்ட அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி வாகை சூடி புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. அதேபோல் நியூசிலாந்து அணியும் எதிர்கொண்ட 4 போட்டிகளிலும் வென்று ரன் ரேட் அடிப்படையில் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது.
இதுவரை இரண்டு முறை உலக கோப்பைகளை வென்ற இந்திய அணி, இந்த முறை சொந்த மண்ணில் நடப்பதால் மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முன்னைபுடன் விளையாடி வருகிறது. மறுப்பக்கம் கடந்த இரு சீசன்களாக (2015 மற்றும் 2019) இறுதி போட்டி வரை முன்னேறி தோல்வியை தழுவிய வேதனையுடனும், வெறியுடனும் இந்த உலக கோப்பையில் நியூசிலாந்து அணி களம் இறங்கி விளையாடி வருகிறது.
அதற்கு ஏற்றவாரு முதல் போட்டியில் இருந்தே வெறி கொண்டு விளையாடி வரும் நியூசிலாந்து அணி, இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலுமே வெற்றி பெற்று மிகுந்த பலத்துடன் காணப்படுகிறது. இந்திய அணியோ 2003ஆம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு இதுவரை நியூசிலாந்து அணியை வென்றது இல்லை என்ற மோசமான சாதனையுடன் தொடர்ந்து வருகிறது.