பெங்களூரு :இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி பஞ்சாப்பின், மொஹாலி மைதானத்தில் நடைபெற்ற முதலாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூர் மைதானத்தில் கடந்த ஜனவரி 14ஆம் தேதி நடைபெற்ற 2வது டி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி நாளை (ஜன. 17) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது.
தொடரை இந்திய அணி கைப்பற்றியதால், 3வது டி20 கிரிக்கெட் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. அதேநேரம், ஆப்கானிஸ்தான் அணியிடம் இதுவரை ஒருமுறை கூட டி20 போட்டியில் தோல்வி கண்டது இல்லை என்ற சாதனையை பெற வேண்டுமானால் இந்திய அணி இந்த ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.
அதேநேரம் முந்தைய இரண்டு ஆட்டங்களிலும் களமிறக்கப்படாத வீரர்களுக்கு 3வது டி20 போட்டியில் வாய்ப்பு அளிக்கவும் அதற்கு ஏற்ற வகையில் அணியில் மாற்றம் கொண்டு வரவும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்திய வீரர் ஷிவம் துபே நடப்பு தொடரில் நன்றாக விளையாடி வருகிறார். முறையே முதல் இரண்டு ஆட்டங்களிலும் 60 ரன் மற்றும் 63 ரன் என குவித்து இந்திய அணியில் நல்ல பங்களிப்பு அளித்து வருகிறார். அதேபோல் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் அணிக்கான தனது பங்களிப்பை நன்றாக வழங்கி வருகிறார்.
அதேநேரம் நட்சத்திர வீரர் விராட் கோலி புதிய மைல்கல்லை நோக்கி பயணித்து வருகிறார். வெறும் 6 ரன்கள் மட்டும் எடுத்தால் டி20 கிரிக்கெட் போட்டிகளில் 12 ஆயிரம் ரன்கள் குவித்த முதல் வீரர் என்ற சிறப்பை விராட் கோலி பெறுவார். கடைசி ஆட்டத்தில் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.