பர்படோஸ் :வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி திணறி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி இரண்டு டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 இருபது ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதலில் நடந்த டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-க்கு 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகளுக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த ஜூலை 27ஆம் தேதி தொடங்கியது.
பார்படோஸ் நகரில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி அதே பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் சாய் ஹோப் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இந்திய அணியின் இன்னிங்சை இஷான் கிஷன் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் தொடங்கினர். வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பந்து வீச்சை திறம்பட சமாளித்த இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுப்மான் கில் தன் பங்குக்கு 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மறுபுறம் அடுத்தடுத்து விக்கெட் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் நிலைத்து நின்று ஆடிய இஷான் கிஷன் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். அரை சதம் விளாசிய கையோடு இஷான் கிஷன் (55 ரன்) ரோமேரியோ பந்துவீச்சில் கேட்ச்சாகி வெளியேறினார். மழை காரணமாக ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், சிறிது நேரத்திற்கு பின் மீண்டும் துவக்கப்பட்டது.
மைதானம் ஈரமாக இருந்தது வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக அமைந்தது. இந்திய அணியில் சீரான இடவெளியில் விக்கெட் வீழ்ந்த வண்ணம் உள்ளது. சஞ்சு சாம்சன் 9ரன், அக்சர் பட்டேல் 1 ரன், கேப்டன் ஹர்த்திக் பாண்ட்யா 7 ரன் என இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.
சிறிது நேரம் மட்டும் தாக்குப்பிடித்த அதிரடி ஆட்டக்காரர் சூர்யகுமார் யாதவ் தன் பங்குக்கு 24 ரன்கள் மட்டும் எடுத்தார். 37 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் இந்திய அணி எடுத்து இருந்த நிலையில் ஆட்டத்தில் மீண்டும் மழை குறுக்கிட்டது. மைதானம் தார்ப்பாய் கொண்டு மூடப்பட்டது. ஆட்டத்தின் ஓவர்களை குறைக்க ஐசிசி திட்டமிட்டு உள்ளதாக தகவல் கூறப்படுகிறது.
இதையும் படிங்க :ஒரே டீ- சர்டில் சஞ்சு சாம்சன் - சூர்யகுமார் யாதவ்.. குழப்பத்தில் இந்திய வீரர்கள், ரசிகர்கள்... என்னதான் காரணம்?