அசாம்: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவுபெற்ற நிலையில், அதில் 2-க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி வெற்றிபெற்றது.
ஒருநாள் கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான முதலாவது 50 ஓவர் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (ஜன.10) நடந்தது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மான் கில் இன்னிங்ஸை தொடங்கினர்.
ஆரம்பம் முதலே நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய இருவரும், ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி துரித ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர்.19.4-வது ஓவரில் இந்த ஜோடி பிரிந்தது. சுப்மான் கில் 70 ரன்கள் குவித்து எல்.பி.டபிள்யூ ஆகி அவுட்டானார்.
தொடர்ந்து களமிறங்கிய கோலி, இலங்கை பந்துவீச்சை சிதறிடித்து ரன்களைக் குவித்தார். ஒருபுறம் கோலி அதிரடியாக ஆடிய நிலையில், மறுபுறம் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்தன. இலங்கை பந்து வீச்சை நொறுக்கி எடுத்த கோலி, வெற்றிகரமாக தனது 45ஆவது சதத்தைப் பூர்த்தி செய்தார். உள்நாட்டில் அதிக சதங்கள் அடித்த ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை கோலி, சமன் செய்தார்.