கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிச. 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்த நிலையில் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் கைவிடப்பட்டது.
இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (டிச.12) கெபெர்ஹாவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். உடல் நலப் பிரச்சினகள் காரணமாக இந்திய அணியில் ருதுராஜ் கெய்க்வாட் களமிறங்கவில்லை.
இந்திய அணியின் இன்னிங்சை யுஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. ரன் கணக்கை தொடங்குவதற்கு முன்னரே இந்திய அணி விக்கெட் கணக்கை தொடங்கியது. தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ரன் ஏதுமின்றி டக் அவுட்டாகி வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு தொடக்க வீரர் சுப்மன் கில் டக் அவுட்டாகி ரசிகர்களிடையே ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய திலக் வர்மா மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ரன் வேகத்தை உயர்த்தினர். திலக் வர்மா தனது பங்குக்கு 29 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதைத் தொடர்ந்து களமிறங்கிய ரிங் சிங், கேப்டன் சூர்யகுமாருடன் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டார். அபாரமாக விளையாடிய இந்த ஜோடி ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தியது. அரை சதம் கடந்த கேப்டன் சூர்யகுமார் யாதவ் 56 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
மறுமுனையில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், ரிங்கு சிங் நிலைத்து நின்று விளையாடி அணியை சரிவில் இருந்து மீட்டார். விக்கெட் கீப்பர் ஜித்தேஷ் சர்மா 1 ரன், ரவீந்திர ஜடேஜா 19 ரன், அர்ஷதீப் சிங் டக் அவுட் என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 19 புள்ளி 3 ஓவர்கள் கடந்த நிலையில் திடீரென மழை பெய்யத் தொடங்கியது. 19 புள்ளி 3 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து உள்ளது.
இதையும் படிங்க :Ind Vs SA : டாஸ் வென்று தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!