பார்ல்: இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரும், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரும் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் நிறைவு பெற்ற நிலையில், அதில் 1-க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
தொடர்ந்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியும், தொடர்ந்து டிசம்பர் 19ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியும் வெற்றி பெற்றது.
இதனால் தொடர் 1-க்கு 1 என்ற கணக்கில் உள்ளது. தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 21) பார்ல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி இந்திய அணி பேட்டிங் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய ராஜட் பட்டிதர் 22 ரன்களிலும், சாய் சுதர்சன் 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து கேப்டன் கே.எல்.ராகுல் 21 ரன்களில் வெளியேற, சஞ்சு சாம்சன் மற்றும் திலக் வர்மா அணிக்கு ரன்களை சேர்த்தனர். இந்த கூட்டணி சிறப்பாக செயல்பட்டது. திலக் வர்மா 52 ரன்கள் எடுத்த நிலையில், மகாராஜ் பந்து வீச்சில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ரிங்கு சிங் 38, அக்சர் 1, வாஷிங்டன் சுந்தர் 14 என ஆட்டமிழந்தனர். ஆனால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தின சஞ்சு சாம்சன் சதம் விளாசினார். அதன் பின் 108 ரன்களுக்கு அவுட் ஆகினார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட்கள் இழப்பிற்கு 296 ரன்கள் குவித்தது. தென் ஆப்பிரிக்கா பந்து வீச்சு சார்பில் அதிகபட்சமாக ஹென்ட்ரிக்ஸ் 3 விக்கெட்டும், நந்த்ரே பர்கர் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதனைத் தொடர்ந்து தென் ஆப்பிரிக்கா அணி 297 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகின்றனர். தொடக்க வீரரான ரீசா ஹென்ட்ரிக்ஸ் 19 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், டோனி டி ஜோர்ஜி மற்றும் ராஸ்ஸி வான் டெர் டுசென் களத்தில் நின்று விளையாடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா அணி 14 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்பிற்கு 75 ரன்கள் எடுத்துள்ளது.
இதையும் படிங்க:இந்திய மல்யுத்த சம்மேளன தலைவர் தேர்தல்! வீரர், வீராங்கனைகளுக்கு அடுத்த அதிர்ச்சி?