செஞ்சூரியன்: இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தலா 3 ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாடி முடித்த நிலையில், இவ்விரு அணிக்களுக்கும் இடையேயான டெஸ்ட் தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி, கடந்த டிசம்பர் 26ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் செஞ்சூரியன் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியின் வீரர்கள் எவரும் பெரிதாக சோபிக்கவில்லை. ரோகித் சர்மா 5, யஷஸ்வி ஜெய்ஸ்வால் 17, சுப்மன் கில் 2, ஸ்ரேயாஸ் ஐயர் 31, விராட் கோலி 38, ரவிச்சந்திர அஷ்வின் 8 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
ஆனால், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான கே.எல்.ராகுல் மட்டுமே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணிக்கு ரன்களை சேர்த்தார். அவர் 137 பந்துகளில் 101 ரன்கள் குவித்து வெளியேறினார். இது அவருக்கு டெஸ்ட் போட்டிகளில் 8வது சதம் ஆகும். முதல் இன்னிங்ஸின் முடிவில் இந்திய அணி 245 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதையடுத்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட்கள் இழப்பிற்கு 256 ரன்கள் எடுத்து 11 ரன்கள் முன்னிலையில் இருந்தது. இதில் தொடக்க வீரரான டீன் எல்கர் சதம் விளாசி அசத்தினார். அவருடன் சேர்ந்து அணிக்கு ரன்களை குவித்து வந்த டேவிட் பெடிங்காம், 56 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.