ஜோகன்னஸ்பெர்க் : தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடரி நிறைவு பெற்ற நிலையில், அதில் 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.
இந்நிலையில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (டிச. 17) ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி தென் ஆப்பிரிக்க அணியின் இன்னிங்சை ரீஸா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஷோர்சி ஆகியோர் தொடங்கினர்.
தென் ஆப்பிரிக்க அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அர்ஷ்தீப் சிங் வீசிய பந்தில் தொடக்க வீரர் ரீஸா ஹென்ட்ரிக்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ராஸ்ஸி வான் தர் துஸ்சென் அதே அர்ஷ்தீப் சிங் பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
3 ரன்களுக்குள் தென் ஆப்பிரிக்க அணி அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனிடையே மற்றொரு தொடக்க வீரர் டோனி ஷோர்சியுடன் கைகோர்த்த கேப்டன் எய்டன் மார்க்ராம் அணியின் நிலையை சீராக்க முயன்றார். இருப்பினும் அந்த முயற்சி தோல்வியில் முடிந்தது.