கெபெர்ஹா : இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. டி20 கிரிக்கெட் தொடர் முடிந்த நிலையில் அது 1க்கு 1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், இன்று (டிச. 19) இரண்டாவது ஆட்டம் கெபெர்ஹா மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணியின் இன்னிங்சை ருதுராஜ் கெய்வாட் மற்றும் சாய் சுதர்சன் ஆகியோர் தொடங்கினர்.
இந்திய அணிக்கு தொடக்கமே அதிர்ச்சிகரமாக அமைந்தது. தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் 4 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரைத் தொடர்ந்து களமிற்ங்கிய திலக் வர்மா 10 ரன்கள் மட்டும் எடுத்து வெளியேறினார். இதனிடையே களமிறங்கிய கேப்டன் கே.எல்.ராகுல், மற்றொரு தொடக்க வீரர் சாய் சுதர்சனுடன் இணைந்து மெல்ல அணியை சரிவில் இருந்து மீட்கத் தொடங்கினார்.
இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியும் அதேநேரம் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பியும் குழுமியிருந்த ரசிகர்களை உற்சாக வெள்ளத்தில் மிதக்க வைத்தனர். அரை சதம் கடந்த விளையாடிக் கொண்டு இருந்த சாய் சுதர்சன் 62 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சனும் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன. சிறிது நேரம் தாக்கு பிடித்த கேப்டன் கே.எல்.ராகுல் (56 ரன்) அரை சதம் கடந்த சிறிது நேரத்தில் ஆட்டமிழந்தார். 46 புள்ளி 2 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 211 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
முகேஷ் குமார் 4 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து அடுத்தடுத்து வெளியேறி விக்கெட் அணிவகுப்பு நடத்தினர். தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் நன்ட்ரே பர்கர் 3 விக்கெட்டுகளும், புயூரன் ஹென்ட்ரிக்ஸ் மற்றும் கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். 212 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க :IPL Auction 2024: கவனம் ஈர்த்த தமிழக வீரர் ஷாருக்கான்! சர்வதேச வீரர்களுக்கே சவாலளித்து அதிரடி!