ஜோகன்னஸ்பெர்க் :தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.
தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 12ஆம் தேதி கெபெர்ஹாவில் நடைபெற்று. முதலில் விளையாடிய இந்திய அணி 19 புள்ளி ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
தொடர் மழை காரணமாக டக் வொர்த் லிவீஸ் விதிப்படி வெற்றி இலக்கு குறைக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 13 புள்ளி 5 ஓவர்களில் 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் தொடரில் 1-க்கு 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி ஜோகன்னஸ்பெர்க் மைதானத்தில் இன்று (டிச. 14) நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் மட்டும் தொடரை 1-க்கு 1 என்ற கணக்கில் சமன் செய்ய முடியும் என்பதால் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
கடைசி ஆட்டத்தில் மழையின் தாக்கம் அதிகம் இருந்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கி, தென் ஆப்பிரிக்க அணிக்கு சாதகமாக அமைந்தது. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் டாஸ் வெல்வது என்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.