இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 44 ரன்களுடனும், துணை கேப்டன் ரஹானே 29 ரன்களுடனும் ஆட்டத்தைத் தொடங்கினர்.
ஆட்டம் ஆரம்பித்த சிறிது நேரத்திலேயே இந்தியாவுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. முந்தைய நாள் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி 3ஆம் நாளில் ரன் ஏதும் சேர்க்காமல் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின்னர், பந்த், ரஹானே, அஸ்வின் என அடுத்தடுத்து இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க உணவு இடைவெளியின்போது இந்தியா 7 விக்கெட்டுக்கு 211 ரன்கள் எடுத்திருந்தது.
இரண்டாவது செஷன்
இரண்டாவது செஷனிலும் இந்திய வீரர்களால் நீண்ட நேரம் தாக்குப்பிடிக்க முடியவில்லை. 92.1 ஓவரில் இந்திய அணி 217 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவுசெய்தது.
இந்திய தரப்பில் அதிகபட்சமாக ரஹானே 49 ரன்களும், கோலி 44 ரன்களும் எடுத்தனர். நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேமிசன் அதிகபட்சமாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தினார். டெஸ்ட் போட்டிகளில் இவரின் ஐந்தாவது ஐந்து-விக்கெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நியூசிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை மிகப் பொறுமையாகவே விளையாடியது. தொடக்க வீரர்களான லேதம் - கான்வே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.