அகமதாபாத் : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இறுதி ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர்.
தொடக்க இந்திய அணிக்கு ஓரளவுக்கு நன்றாக அமைந்தாலும் மிடில் ஓவர்கள், மிக மோசமாக அமைந்தது. ஆஸ்திரேலிய பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் இந்திய வீரர்கள் திணறினர். கேப்டன் ரோகித் சர்மா 47 ரன், விராட் கோலி 54 ரன், விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுல் 66 ரன் ஆகியோர் தவிர மற்ற வீரர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை.
சொற்ப ரன்களில் இந்திய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி, இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஆல்-அவுட்டானது.
50 ஓவர்களில் 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது. பவுண்டரியுடன் ஆரம்பித்த ஆஸ்திரேலிய அணியின் இந்திய வேகபந்து வீச்சாளர்கள் கடிவாளம் போட்டனர். முகமது ஷமி வீசிய பந்தில் டேவிட் வார்னர் (7 ரன்) ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய மிட்செல் மார்ஷ் (15 ரன்) பும்ரா பந்தில் விக்கெட் கீப்பர் கே.எல்.ராகுலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய ஸ்டீவ் சுமித் (4 ரன்) நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பும்ரா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். 15 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் குவித்து உள்ளது. டிராவிஸ் ஹெட் 27 ரன்னும், மார்னஸ் லபுக்சனே 8 ரன்னும் எடுத்து களத்தில் விளையாடி வருகின்றனர்.
இதையும் படிங்க :India Vs Australia : விராட் கோலி அரைசதம்! ஒருநாள் போட்டியில் புது சாதனை!