சென்னை :உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று (அக். 8) நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் திருவிழா கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாடு முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை, தர்மசாலா, புனே உள்ளிட்ட 10 நகரங்களில் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் லீக் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இலங்கை, ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து, வங்கதேசம் ஆகிய 10 அணிகள் லீக் சுற்று ஆட்டங்களில் விளையாடி வருகின்றன. லீக் ஆட்டங்கள் முடிவில் புள்ளி பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்நிலையில், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 5வது லீக் ஆட்டத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்திய அணியில் தொடக்க ஆட்டக்காரர் சுப்மான் கில் இருப்பது என்பது சந்தேகத்திற்குரியதாகவே உள்ளது. டாஸ் போட்ட பின்னரே அணியில் அவரது இருப்பு குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இல்லாத பட்சத்தில் கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்குவார் எனத் தெரிகிறது. மேலும் இஷான் கிஷன், ஸ்ரேயாஸ் அய்யர் இருவரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடிய மைதானம் என்பதால் உள்ளூர் சூழ்நிலை அறிந்த தமிழக வீரர் அஸ்வின் இன்றைய ஆட்டத்தில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை சுழற்பந்துவீச்சுக்கு ஈடுகொடுத்து விளையாடக் கூடிய வீரர்கள் அணியில் உள்ளனர். கிளைன் மேக்ஸ்வல் இன்றைய ஆட்டத்தில் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்கும் வீரர்கள் நிலைத்து நின்றால் சென்னை மைதானத்தில் எளிதாக 300 ரன்களுக்கு மேல் குவிக்க முடியும்.