அகமதாபாத் :13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. லீக் மற்றும் அரைஇறுதி சுற்றுகள் நிறைவு பெற்ற நிலையில், இன்று (நவ. 19) கிளைமாக்ஸ் காட்சி அரங்கேற்றம் நடைபெறுகிறது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது.
போட்டிக்கு முன்னதாக மைதானத்தில் குழுமியிருக்கும் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் கண்கவர் வான் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. வெண்ணிற புகையை கக்கிக் கொண்டு சென்ற விமானங்களை கண்டு பொது மக்கள் குஷி அடைந்தனர்.
டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்திய அணியின் இன்னிங்சை தொடக்க வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் தொடங்கினர். சுப்மன் கில் நிதானமாக விளையாடிக் கொண்டு இருந்த நேரத்தில் மறுபுறம் ரோகித் சர்மா அடித்து ஆடத் தொடங்கினார்.
இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கிய சுப்மன் கில் இந்த முறை பெரிய அளவில் சோபிக்கவில்லை. கில் 4 ரன் எடுத்து இருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்தில் ஆடம் ஜம்பாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்த கேப்டன் ரோகித் சர்மா நீடிக்கவில்லை.