மும்பை: ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. டெஸ்ட் மற்றும் இரண்டு ஒருநாள் போட்டிகள் முடிவடைந்த நிலையில், இன்று ஒருநாள் தொடரின் 3வது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
ஒரு போட்டி கொண்ட டெஸ்tடில் இந்திய அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தியது. அதனைத் தொடர்ந்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில், ஆஸ்திரேலிய அணி முடிவடைந்த இரண்டு போட்டிகளிலுமே வென்று தொடரை கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், இன்று நடைபெற்று வரும் கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க வீராங்கனைகளான ஃபோப் லிட்ச்ஃபீல்ட் மற்றும் கேப்டன் அலிசா ஹீலி களம் இறங்கினர். இந்த கூட்டணி இந்திய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன்களை குவித்தது. சிறப்பாக ஆடி வந்த இந்த ஜோடி 189 ரன்கள் எடுத்திருந்தபோது பிரிந்தது. அலிசா ஹீலி 4 ஃபோர்கள் மற்றும் 3 சிக்சர்கள் உள்பட 82 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.