விசாகப்பட்டினம் : ஒருநாள் உலகக் கோப்பை கடந்த 19ஆம் தேதி முடிவடைந்த நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் விசாகப்பட்டினத்தில் தொடங்கியது. காயம் காரணமாக ஹார்திக் பாண்ட்யா ஒய்வு பெற்ற நிலையில், சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.
டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரராக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மேத்யூ ஷார்ட் களம் இறங்கினர். நல்ல தொடக்கத்தை கொடுக்க முயன்ற இந்த ஜோடி முதல் விக்கெட்டை 31 ரன்களில் இழந்தது. மேதீவ் ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார்.
அதன்பின் ஜோஸ் இங்கிலிஸ், ஸ்மித்துடன் கைக்கோர்க்க, இந்த ஜோடி அணிக்கு ரன்களை குவித்து வந்தது. அதிரடியாக ஆடிய இங்கிலிஸ் அரைசதம் கடந்து வேகமாக சதத்தை நோக்கி முன்னேற, மறுபக்கம் நிதானமாக விளையாடிய ஸ்மித் அரைசதம் கடந்து ரன் அவுட் ஆனார்.
பின்னர் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஜோஸ் இங்கிலிஸ் 47 பந்துகளில் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை ஜோஸ் இங்கிலீஸ் விளாசினார். அதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 208 ரன்கள் குவித்ததுள்ளது.
தொடர்ந்து இந்திய அணி 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களம் இறங்கியது. தொடக்க வீரரான ருதுராஜ் கெய்க்வாட் பந்தை சந்திக்காமலேயே ரன் அவுட் ஆனார். அதன்பின் 21 ரன்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆட்டமிழக்க, இஷான் கிஷன் - சூர்யகுமார் யாதவ் கூட்டணி சேர்ந்தது. இந்த கூட்டணி வெற்றிப் பாதையை நோக்கி அணியை கொண்டு சென்றது.
இருவரும் அரைசதம் விளாச, இந்திய அணியின் ஸ்கோர் 134 ஆக இருந்த போது இஷான் கிஷன் 58 ரன்களில் மேதீவ் ஷார்டிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதனைத் தொடர்ந்து திலக் வர்மா 12 ரன்களில் வெளியேறினார். அபாரமாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற சூர்யகுமார் யாதவ் 80 ரன்களிலும் ஆட்டமிழந்தார்.
இந்திய அணி எளிதில் வெற்றி பெரும் என நினைத்த நேரத்தில், அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து அதிர்ச்சியை தந்தது. இறுதியில் ஒரு பந்துக்கு ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற கட்டத்தில், ரிங்கு சிங் சிக்ஸர் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். ஆனால் வீசப்பட்ட அந்த கடைசி பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டது. இதனால் இந்திய அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
இதையும் படிங்க:வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரருக்கு ஐசிசி தடை! என்ன காரணம் தெரியுமா?