கவுகாத்தி :இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 3வது டி20 கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் இன்னிங்சை யஷஸ்வி ஜெய்ஸ்வால், ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடங்கினர்.
அதிரடி நாயகன் ஜெய்ஸ்வால் இந்த முறை சொதப்பினார். 6 ரன்கள் மட்டும் எடுத்து ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்து அதிருப்தியை ஏற்படுத்தினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய இஷான் கிஷன் பெரிய அளவில் சோபிக்கவில்லை. டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். 24 ரன்களுக்குள் 2 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி தடுமாறியது.
அப்போது மற்றொரு தொடக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட்டுன் கைகோர்த்த கேப்டன் சூர்யகுமார் யாதவ், அணியை சரிவு பாதையில் இருந்து மீட்கும் பணியில் ஈடுபட்டார். இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டுக்கு அனுப்பி தங்களை நிலைப்படுத்திக் கொண்டனர். அதன் பின் ருதுராஜ் ருத்ரதாண்டவம் ஆடத் தொடங்கினார்.
அபாரமாக விளையாடிய ருதுராஜ் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளார்களை அடித்து துவைத்தார். அவருக்கு சிறிது நேரம் உறுதுணையாக கேப்டன் சூர்யகுமார் யாதவ் (39 ரன்) இருந்தார். இந்த ஜோடி பிரிந்த நிலையில், திலக் வர்மா களமிறங்கினார். அணியில் தனக்கான இருப்பிடத்தை தக்கவைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருந்த திலக் வர்மா அடித்து விளையாடத் தொடங்கினார்.
மறுமுனையில் அதிரடி நாயகம் ருதுராஜ் கெய்க்வாட் சதம் விளாசினார். சதம் விளாசிய பின்னரும் அடங்காத ருதுராஜ், ஆஸ்திரேலிய பந்துகளை நாலாபுறமும் சிதறவிட்டு குழுமியிருந்த ரசிகர்களை குஷிப்படுத்தினார். 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு இந்திய அணி ருதுராஜின் சதத்தின் உதவியுடன் 222 ரன்கள் குவித்தது.
தொடக்க நாயகன் ருதுராஜ் கெய்க்வாட் 123 ரன்கள் விளாசித் தள்ளினார். அவருக்கு உறுதுணையாக திலக் வர்மா 37 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. கிளென் மேக்ஸ்வெல் ஒரு ஓவர் மட்டும் வீசி 30 ரன்களை வாரி வழங்கினார். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 223 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வருகிறது.
இதையும் படிங்க :Ind Vs Aus : டாஸ் வென்று ஆஸ்திரேலியா பந்துவீச்சு தேர்வு!