சென்னை: ஐசிசி உலகக் கோப்பை கடந்த 5ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதன் 5வது லீக் போட்டியாக இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதும் லீக் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன் படி தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் மற்றும் மிட்செல் மார்ஸ் களம் இறங்கினர். தொடக்கம் முதலே சிறப்பாக பந்து வீச்சிய இந்திய அணி வீரர்கள் முதல் விக்கெட்டாக மார்ஸ் விக்கெட்டை கைப்பற்றினர்.
மார்ஸ் எந்த ரன்களும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அதன் பின் வார்னர் மற்றும் ஸ்மித் அணிக்கு நிதானமாக ரன்களை சேர்த்தனர். ஒரு கட்டத்தில் வார்னர் 41 ரன்களுடனும், ஸ்மித் 46 ரன்களுடனும் ஆட்டமிழக்க, அதனை தொடர்ந்து வந்த லபுசேன் 27, மேக்ஸ்வெல் 15, அலெக்ஸ் கேரி 0, கிரீன் 8, கம்மின்ஸ் 15 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இறுதியில் ஆஸ்திரேலியா அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 199 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ஜடேஜா 3 விக்கெட்டும், குல்தீப் யாதவ் மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.