கவுகாத்தி: இந்திய - ஆஸ்திரேலியா இடையேயான டி20 தொடர் கடந்த 23ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இத்தொடரின் இரண்டு போட்டிகள் முடிவடைந்த நிலையில், இரு அணிகளுக்கும் இடையேயான 3வது டி20 போட்டி நாளை (நவம்பர் 28) கவுகத்தியில் உள்ள பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரையில், நடைபெற்ற இரு போட்டிகளிலுமே வென்று 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்திய அணியின் நட்சத்திர பேட்டரான ஷ்ரேயாஸ் ஐயர் 4 மற்றும் 5வது போட்டிகளில் பங்கேற்கவுள்ளார். மேலும், துணைக் கேப்டனாகவும் செயல்படவுள்ளார். இவர் பிளேயிங் 11-ல் வரும் பட்சத்தில் திலக் வர்மா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
திலக் வர்மா கடந்த இரண்டு போட்டிகளில் மொத்தமாகவே 12 பந்துகளையே சந்தித்துள்ளார். முதல் போட்டியில் 12 ரன்களும், இரண்டாவது போட்டியில் அவர் 7 ரன்களும் எடுத்துள்ளார். இடது கை பேட்டரான ரிங்கு சிங் இரு போட்டிகளிலுமே முக்கிய பங்கை வகித்துள்ளார்.
முதல் போட்டியில் செஸ்ஸிங்கில் கடைசி பந்தில் சிக்ஸ் அடித்து இந்திய அணியை வெற்றி பெற செய்தார். அதேபோல் 2வது போட்டியில் 9 பந்துகளில் 4 ஃபோர்கள், 2 சிக்ஸர்கள் உட்பட 31 ரன்கள் விளாசி அணியின் ஸ்கோரை உயர்த்த உதவினார்.
அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் 2வது போட்டியில் 19 ரன்களில் வெளியேறினாலும், முதல் போட்டியில் 80 ரன்கள் குவித்து அணியின் வெற்றியை உறுதி செய்தார். ஒன் டவுனில் களம் இறங்கும் இஷான் கிஷன் இரு போட்டிகளிலுமே சிறப்பாக செயல்பட்டுள்ளார். தொடக்க வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ஜெய்ஸ்வால் முதல் போட்டியில் சரியாக விளையாடவில்லை என்றாலும், 2வது போட்டியில் நல்ல தொடக்கத்தை அணிக்கு வழங்கினர்.
மறுபக்கம் ஆஸ்திரேலிய அணியை பெறுத்தவரையில், கிளென் மேக்ஸ்வெல், ஸ்டீவ் ஸ்மித், ஆடம் ஜம்பா மற்றும் மார்கஸ் ஸ்டோனிஸ் ஆகியோர் உலகக் கோப்பையை தொடர்ந்து இதிலும் விளையாடி வருவதால் அவர்களிடம் சற்று சோர்வு காணப்படுகிறது.