ராஜ்கோட்:இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அடுத்த மாதம் தொடங்கவுள்ள உலகக் கோப்பை போட்டிக்கு ஆயத்தமாகும் விதத்தில் இந்த தொடர் நடத்தப்படுகிறது.
முதல் இரண்டு போட்டியில் இந்திய அணி வென்று தொடரை கைப்பற்றிய நிலையில் இன்று மூன்றாவது ஒருநாள் போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்திய அணியில் ஓய்வில் இருந்த ரோகித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர்.
அதனால் கடந்த போட்டியில் சதம் அடித்த கில் நீக்கப்பட்டார். அஷ்வின் நீக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.ஆஸ்திரேலிய அணியில் க்ளென் மேக்ஸ்வெல், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் அணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா தனது பேட்டிங்கை தொடங்கியது. டேவிட் வார்னர் ப்ரசித் கிருஷ்ணா, சிராஜ் பந்துகளை பவுண்டரிகளாக சிதறடித்தார்.
அரைசதம் அடித்த டேவிட் வார்னர் 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ப்ரசித் பந்தில் கீப்பர் ராகுலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் களமிறங்கிய ஸ்டீவன் ஸ்மித், மார்ஸுடன் சேர்ந்து அதிரடி ஆட்டத்தை தொடர்ந்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு ஸ்டீவன் ஸ்மித் மற்றும் மார்ஷ் இருவரும் அணியின் ரன் ரேட் குறையாமல் பார்த்துக் கொண்டனர்.
ஆஸ்திரேலிய அணி 215 ரன்கள் எடுத்திருந்த நிலையில், சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த மார்ஷ் கவர் திசையில் பவுண்டரி அடிக்க ஆசைப்பட்டு, குல்தீப் யாதவ் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார். பின்னர் சிராஜ் பந்தில் 74 ரன்களுக்கு ஸ்மித் அவுட்டானார். பின்னர் களமிறங்கிய லம்புஷேனே வழக்கத்துக்கு மாறாக அதிரடியாக ரன்கள் சேர்த்தார்.
அதே நேரத்தில், வந்த வேகத்தில் இரண்டு பவுண்டரிகள் அடித்த அலெக்ஸ் கேரி 11 ரன்களுக்கு பும்ரா பந்தில் அவுட்டானார். பின்னர் பும்ரா வீசிய துல்லியமான யார்க்கரில் மேக்ஸ்வெல் 5 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். அடுத்து களமிறங்கிய க்ரீன் 9 ரன்களுக்கு அவுட்டானார்.