கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடும் சூப்பர் 4 சுற்று போட்டி கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறுகிறது.
6 அணிகள் விளையாடும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா, பாகிஸ்தான் நாடுகளில் நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில் அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் அணிகள் அடுத்த சுற்றான சூப்பர் 4க்கும் தகுதி பெற்றனர். தற்போது சூப்பர் 4 சுற்று நடைபெற்று வருகிறது.
கொழும்பு, பிரேமதாசா மைதானத்தில் இன்று (செப். 12) நடைபெறும் 4வது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - இலங்கை அணிகள் விளையாடுகின்றன. இலங்கை அணி தனது முதலாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்காளதேசம் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நல்ல பார்மில் உள்ளது.
அதே பார்முடன் இன்றைய ஆட்டத்திலும் இந்தியாவை எதிர்கொள்ளும் என்பதில் சந்தேகமில்லை. வங்காளதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் சமரவிக்ரமா 93 ரன்கள் விளாசி சிறப்பாக செயல்பட்டார். மற்ற வீரர்களின் பங்களிப்புடன் இலங்கை அணி 297 ரன்களை கடந்தது. இதேபோல் இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணிக்கு அவர் நெருக்கடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியை பொறுத்தவரை நேற்றை (செப். 11) பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி 228 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று உள்ளது. இதனால் இலங்கை அணியை இன்றைய ஆட்டத்தில் இந்திய வீரர்கள் ஊதித் தள்ளிவிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய அணியில் தொடக்க வீரர்கள் ரோகித் சர்மா, சுப்மான் கில், விராட் கோலி, கே.எல். ராகுல் உள்ளிட்டோர் நல்ல பார்மில் உள்ளனர். இன்றைய ஆட்டத்திலும் இவர்கள் ஒருசேர சிறப்பாக செயல்பட்டால் இலங்கை அணிக்கு இமாலய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயித்து விடலாம் என்பதில் துளியும் சந்தேகமில்லை.