கொழும்பு : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் இன்று (செப். 17) பலப்பரீட்சை நடத்துகின்றன.
இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நேபாளம், வங்கதேசம் ஆகிய 6 அணிகள் கலந்து கொண்ட ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி பாகிஸ்தான் மற்றும் இலங்கையில் தொடங்கியது. லீக் மற்றும் சூப்பர் 4 சுற்றுகள் நிறைவடைந்த நிலையில், தற்போது கிளைமாக்ஸ் காட்சியான இறுதிப் போட்டி நெருங்கி உள்ளது.
இறுதிப் போட்டிக்கு இந்தியா - இலங்கை அணிகள் தகுதி பெற்று உள்ளனர். கொழும்பி பிரேமதாசா மைதானத்தில் இன்று மதியம் 3 மணிக்கு நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்தியா - இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. லீக் சுற்று ஆட்டங்களில் தோல்வியே தழுவாத இந்திய அணி, தனது கடைசி சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்கதேசம் அணியிடம் தோல்வி கண்டது.
சிறிய அணிகளுடன் விளையாடும் போது இந்திய வீரர்கள் சில நேரங்களில் சோடை போவதாக கூறப்படுகிறது. கவனமின்மை உள்ளிட்ட காரணங்களால் இந்திய வீரர்கள் கத்துக்குட்டி அணிகளிடம் சில சமயங்களில் கோட்டைவிடுவதாக சொல்லப்படுகிறது. இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங் ஆர்டர் ஓரளவுக்கு நல்ல நிலையில் உள்ளது.
தொடக்க வீரர் சுப்மான் கில் நல்ல பார்மில் உள்ளார். நடப்பாண்டில் அவர் இதுவரை ஆறு சதங்கள் விளாசி உள்ளார். இதற்கு முன் விராட் கோலி நடப்பாண்டில் 5 சதங்கள் விளாசி முதலிடத்தில் இருந்தார். தற்போது அவரை சுப்மான் கில் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்து உள்ளார். அதேபோல் கேப்டன் ரோகித் சர்மாவும் ஓரளவுக்கு பார்மில் உள்ளார்.
மற்ற வீரர்கள் யாரும் நடப்பு ஆசிய தொடரில் பெரிய அளவில் சோபிக்கவில்லை. பந்துவீச்சாளர் அக்சர் பட்டேல் யாரும் எதிர்பார்க்காத வகையில் கடந்த வங்கதேசத்திற்கு எதிரான ஆட்டத்தில் 42 ரன்கள் விளாசி அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். பந்துவீச்சை பொறுத்தவரை கடந்த இரண்டு ஆட்டங்களில் குல்தீப் யாதவ் கை சற்று ஓங்கியே காணப்படுகிறது. பாகிஸ்தான் அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்தி அவர் கவனம் ஈர்த்தார்.
மற்றபடி முகமது ஷமி, ஹர்த்திக் பாண்ட்யா, ஷர்துல் தாகூர் உள்ளிட்டோர் நல்ல நிலையில் உள்ளனர். இலங்கை அணியை பொறுத்தவரை கடைசி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்து தொடரை விட்டே விரட்டியடித்தனர். இலங்கை அணியில் துனித் வெல்லலேகே கவனம் ஈர்க்கிறார்.