கெபெர்ஹா: தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள இந்திய அணி, தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிச. 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.
போட்டி தொடங்கும் முன்பாக டர்பனில் காலை முதல் நிலவிய மோசமான வானிலை காரணமாக தொடர்ந்து கனமழை கொட்டியது. ஆட்டம் துவங்குவதற்கு முன்பும் மழை கொட்டியதால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. தொடர்ந்து மைதானம் முழுவதும் மழை நீர் தேங்கியதால் ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
டாஸ் கூட போடப்படாமல் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று (டிச.12) கெபெர்ஹாவில் நடைபெறுகிறது.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் எய்டன் மார்க்ராம் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது ஆட்டத்தில் வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற இரண்டு அணிகளும் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.