கொழும்பு : 16வது ஆசிய சாம்பியன்ஷிப் கிரிக்கெட் போட்டி இலங்கை மற்றும் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், நேபாளம் ஆகிய 6 அணிகள் இரண்டு பிரிவுகளாக பிரிந்து விளையாடி வருகின்றன. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், அதில் இந்தியா, பாகிஸ்தான், வங்காளதேசன் மற்றும் இலங்கை ஆகிய ஆணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
சூப்பர் 4 சுற்றில் சக அணிகளுடன் மோதி, முதல் இரண்டு இடத்தை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும். கடந்த 6ஆம் தேதி நடைபெற்ற முதலாவது சூப்பர் 4 சுற்றில் வங்காளதேச அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி வீழ்த்தியது. தொடர்ந்து 9 ஆம் தேதி நடைபெற்ற இரண்டாவது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் வங்காள தேசம் அணியை 21 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணி வீழ்த்தியது.
இந்நிலையில், இன்று (செப். 10) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறும் 3வது சூப்பர் 4 சுற்று ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் கோதாவில் இறங்குகின்றன. இந்தியா - பாகிஸ்தான் ஆட்டம் என்றால் அதில் விறுவிறுப்பு பஞ்சம் இருக்காது. அதன்படி இன்றைய ஆட்டத்தில் அனல் பறக்கும்.
பாகிஸ்தான் அணியை பொறுத்தவரை பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் முழு பார்மில் உள்ளனர். இந்திய அணிக்கு, பாகிஸ்தான் வீரர்கள் கடும் சவால் அளிப்பார்கள் என நிச்சயம் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் பேட்டிங் ஆர்டரில் சொதப்பில் நிலை நிலவுகிறது என்றால் அது பொய்யாகாது.
கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்டோர் இன்னும் தங்களது சீரான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அதேபோல் பந்துவீச்சிலும் இந்திய அணி சற்று பலவீனமாக இருக்கிறது. பாகிஸ்தான் அணியுடனான லீக் ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பேட்டிங் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை. வருணபகவான் கருணை அன்று இந்திய அணிக்கு கிடைத்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.