மும்பை : 13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த அக்டோபர் 5ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்ற நிலையில், இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் புள்ளிப் பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடித்து நாக் அவுட் சுற்றான அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று (நவ. 15) நடைபெறும் முதலாவது அரைஇறுதி ஆட்டத்தில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியை முன்னிட்டு வான்கடே மைதானத்தில் இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
விளையாடிய அனைத்து லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அதேபோல், நியூசிலாந்து அணி 9 ஆட்டங்களில் விளையாடி 5ல் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் பட்டியலில் 4வது இடம் பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றது. இந்திய அணி உலக கோப்பை வெல்ல வேண்டும் என்பது கோடிக்கணக்கான மக்களின் விருப்பமாக உள்ளது.
அதேநேரம் கடந்த 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை அரைஇறுதி ஆட்டம் மீண்டும் உருவானது போல் உணரும் வகையில் நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா - நியூசிலாந்து மோதும் அரைஇறுதி போட்டி காணப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு ஜூலை 10ஆம் தேதி இங்கிலாந்து மான்செஸ்டரில் நடந்த அரைஇறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 239 ரன்கள் வெற்றி இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
இந்திய அணியை பொறுத்தவரை பேட்டிங், பவுலிங், பீல்டிங் என அனைத்து வகையிலும் வீரர்கள் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, சுப்மன் கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் என நல்ல உடற்தகுதியுடன் உள்ளனர். பந்துவீச்சில் முகமது ஷமி, ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் மிரட்டி வருகின்றனர்.
அதேபோல் சுழற்பந்துவீச்சில் குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். வீரர்கள் அனைவரும் ஒருசேர தங்களது பங்களிப்பை வழங்கும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை யாராலும் தட்டி பறிக்க முடியாது. அதேநேரம் நியூசிலாந்து அணியும் நல்ல பார்மில் உள்ளது.
அந்த அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் ரச்சின் ரவீந்திரா ஆகியோர் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர். இருவரும் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் அந்த அணி இமாலய ஸ்கோரை வெற்றி இலக்காக நிர்ணயிக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே இந்திய வீரர்கள் இவர்கள் இருவரையும் விரைந்து வெளியேற்றுவது என்பது முக்கியமாக கருதப்படுகிறது.
2019 உலக கோப்பை அரைஇறுதியில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்க இந்திய அணியும், மீண்டும் வெற்றி பெற நியூசிலாந்து அணியும் போராடும் என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணியை இதுவரை 9 முறை நேருக்கு நேர் சந்தித்து உள்ள இந்திய அணி அதில் 4 முறை வெற்றியும், 5 முறை தோல்வியும் கண்டு உள்ளது.