கவுகாத்தி : இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் உலக கோப்பை 4வது பயிற்சி கிரிக்கெட் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெறுகிறது.
13வது உலக கோப்பை கிரிக்கெட் தொடர் அக்டோபர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 19ஆம் தேதி வரை இந்தியாவில் உள்ள 10 நகரங்களில் நடைபெறுகிறது. மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில் இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 நாடுகள் விளையாடுகின்றன.
முதல் முறையாக இந்தியாவில் மட்டும் நடைபெறும் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து வருகின்றனர். உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் இந்தியாவுக்கு வந்தடைந்தன. உலக கோப்பை தொடங்குவதற்கு முன்னதாக அணிகளுக்கு இடையே பயிற்சி ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
அதையொட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் இன்று (செப். 30) நடைபெறும் 4வது பயிற்சி ஆட்டத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் விளையாடுகின்றன. உலக கோப்பை கிரிக்கெட்டுக் முன்னதாக நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுவது இந்தியாவுக்கு பலமே.