புனே : உலக கோப்பை கிரிக்கெட் திருவிழாவில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் இன்று (அக். 19) நடைபெறும் 17வது லீக் ஆட்டத்தில் இந்தியா - வங்காளதேசம் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 5ஆம் தேதி தொடங்கி நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இலங்கை, வங்தேசம் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
இந்திய அணி ஆரம்பம் முதலே அசத்தில் வருகிறது. கடந்த 8ஆம் தேதி சென்னை எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை வெற்றியுடன் தொடங்கியது. தொடர்ந்து அக்டோபர் 11ஆம் தேதி நடைபெற்ற 2வது லீக் ஆட்டத்தில் 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தான் அணியையும், 14ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெற்ற 3வது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியையும் வென்று புள்ளிப் பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் நீடிக்கிறது.
இந்திய அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் இன்று (அக். 19) வங்காளதேசம் அணியை புனே மைதானத்தில் எதிர்கொள்கிறது. இந்திய அணியை பொறுத்தவரை தொடக்க வீரர் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார். கடந்த இரண்டு ஆட்டங்களில் முறையே ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக 131 ரன்களும், அதைத் தொடர்ந்து 14ஆம் தேதி பாகிஸ்தான் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 63 பந்துகளில் 86 ரன்களும் குவித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளார்.
அவரைத் தொடர்ந்து மிடில் ஆர்டர் வரிசையில் முன்னாள் கேப்டன் விராட் கோலி நங்கூரம் போல் களத்தில் நிலைத்து நின்று அணிக்கு வெற்றியை தேடித் தந்து வருகிறார். அக்டோபர் 8ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் 85 ரன்னும், தொடர்ந்து 11ஆம் தேதி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் என விளாசித் தள்ளினார்.
அவரை தொடர்ந்து கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோரும் நல்ல பார்மில் உள்ளனர். பேட்டிங்கை போன்று பந்துவீச்சிலும் இந்திய அணி பலமாக காணப்படுகிறது. ஜஸ்பிரித் பும்ரா கட்டுக் கோப்பாக பந்துவீசி வருகிறார். அவரை போல் முகமது சிராஜும் நல்ல முயற்சித்து வருகிறார். சுழற்பந்தை பொறுத்தவரை குல்தீப் யாதவ் இந்திய அணியின் ஆஸ்தான வீரராக இருந்து வருகிறார்.
அவருக்கு இணையாக ரவீந்திர ஜடேஜாவும் விக்கெட் வீழ்த்தி வருகிறார். இருவரும் சிறப்பாக விளையாடி வருவதால் அணியில் தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினின் இடம் கேள்விக் குறியாகவே காணப்படுகிறது. அவரைப் போன்று முகமது ஷமியும் அணியை விட்டு தூரமாக காணப்படுகிறார்.