மொஹாலி : இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மொஹாலியில் இன்று நடைபெறுகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெறுகிறது. இந்திய அணியில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி எதிர்கொள்கிறது. காயம் காரணமாக நீண்ட ஓய்வில் இருந்த கே.எல்.ராகுல், கடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கி செஞ்சூரி அடித்து அசத்தினார். இருப்பினும், ஆஸ்திரேலியா போன்ற பலம் வாய்ந்த நாடுகளுடன் மோதும் போது தான் அவரது உண்மையான திறமை வெளிவரும் என்பதால் இன்றைய ஆட்டத்தில் கேப்டனாக தவிர்த்து சிறந்த பேட்ஸ்மேனாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.
மூத்த வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளதால் அணிக்கு நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழக சுழல் அஸ்வின் திரும்பி உள்ளார். கடைசியாக கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்கி இருந்தார். அதன்பின் தற்போது மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
அதேபோல், இன்றைய ஆட்டத்தில் அஸ்வினுக்கு ஜோடியாக ஜடேஜா களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி இருக்கையில் ஏறத்தாழ 6 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஜோடி இணைகிறது என்று கூறலாம். அஸ்வின் - ஜடேஜா இணை மட்டுமே பல்வேறு போட்டிகளில் இந்திய அணிக்கு வெற்றியை தேடி தந்து இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய தொடரில் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் காயத்தால் அவதிப்பட்டு வரும் அக்சர் பட்டேலுக்கு பதிலாக உலக கோப்பை இந்திய அணிக்கு அஸ்வின் தகுதி பெற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால், இன்றைய ஆட்டத்தை அஸ்வின் நிச்சயம் தன் வசமாக்குவார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
மற்றபடி இந்திய அணியில் சுப்மான் கில், இஷான் கிஷான், சூர்யகுமார் யாதவ் உள்ளிட்டோர் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா கடும் சவாலாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. பந்துவீச்சில் வேகத்திற்கு ஆசிய கோப்பை நாயகன் முகமது சிராஜ், முகமது ஷமி உள்ளிட்டோர் பலம் சேர்க்கின்றனர்.
ஆஸ்திரேலியாவை பொறுத்தவரை அந்த அணிக்கு கடந்த தென் ஆப்பிரிக்க தொடர் திருப்திகரமாக அமையவில்லை. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-க்கு 2 என்ற கணக்கில் இழந்தது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இளம் படையுடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி கடும் சவால் அளித்தது.