தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

IND VS AUS 3rd ODI : தொடரை வெல்லுமா இந்தியா? தாக்குபிடிக்குமா ஆஸ்திரேலியா?

இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் இன்று நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்திலும் வென்று ஆஸ்திரேலிய அணியை ஒயிட் வாஷ் செய்ய இந்திய வீரர்கள் மும்முரமாக உள்ளனர்.

Cricket
Cricket

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 27, 2023, 6:51 AM IST

ராஜ்கோட் : இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் கிரிக்கெட் மற்றும் 5 டி20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

கடந்த 22ஆம் தேதி பஞ்சாப், மொஹாலியில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்திலும், தொடர்ந்து 24ஆம் தேதி இந்தூரில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 99 ரன்கள் வித்தியாசத்திலும் அடுத்தடுத்து இரண்டு போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இந்த நிலையில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிர கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றி பெறும் பட்சத்தில் நீண்ட நாட்களுக்கு பின் ஆஸ்திரேலியாவை ஒயிட்வாஷ் செய்த அணி என்ற சிறப்பை பெறும்.

அதேநேரம் முந்தைய இரண்டு ஆட்டங்களில் கண்ட தோல்விக்கு ஆஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டத்தில் பதிலடி கொடுக்க ஆஸ்திரேலிய அணி நிச்சயம் முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. ஓய்வுக்கு பிறகு கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி இந்திய அணிக்கு மீண்டும் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவர்கள் திரும்பும் பட்சத்தில் அது இந்திய அணிக்கு கூடுதலாக வலு சேர்க்கும். மற்றபடி இந்திய வீரர்கள் முழு உடற்தகுதியில் இருக்கிறார்கள். கடந்த ஆட்டத்தில் விட்டு விளாசிய சுப்மான் கில் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் இன்றைய ஆட்டத்திலும் ஒரு சுற்று வந்தால் ஆஸ்திரேலிய அணிக்கு 400 ரன்களை இலக்காக இந்திய வீரர்கள் நிர்ணயிக்கலாம்.

அதேபோல் பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் அஸ்வின் மற்றும் ஜடேஜா சுழல் மாயாஜாலம் நிகழ்த்தினர். இருவரும் தலா 3 விக்கெட்டுகள் கைப்பற்றி அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்காற்றினர். அதேபோல் இன்றைய ஆட்டத்திலும் அவர்கள் ஜொலிப்பார்கள் என நம்பலாம். அதேநேரம் உலக கோப்பை அணியில் அக்சர் பட்டேலுக்கான இடம் இன்னும் கேள்விக் குறியாக உள்ள நிலையில், இன்றைய ஆட்டத்தில் ஜொலிக்க வேண்டிய கட்டாயத்தில் அஸ்வின் உள்ளார்.

அதேநேரம் ஆஸ்திரேலிய அணியை குறைத்து மதிப்பிட முடியாது. கடந்த ஆட்டத்தில் டேவிட் வார்னர் அரைசதம் கடந்தார். அவர் கூடுதலாக சிறிது நேரம் களத்தில் நின்று இருந்தால் இந்திய அணிக்கு கடும் சிக்கலாக மாறியிருக்கக் கூடும். அதேபோல் கடந்த ஆட்டத்தில் அணியை வழிநடத்திய ஸ்டீவன் ஸ்மித் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.

இவர்கள் இருவரும் இன்றைய ஆட்டத்தில் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்த முயற்சிப்பார்கள். மற்றபடி விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கரே உள்ளிட்டோரும் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் கணிக்க முடியாத ஸ்கோரை ஆஸ்திரேலிய அணி கொண்டு வரும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

கடந்த இரண்டு ஆட்டத்தில் கண்ட தோல்வியின் காரணமாக ஆஸ்திரேலிய அணியில் பெரிதும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் இதுவரை களம் இறங்காமல் இருக்கும் அதிரடி ஆட்டக்காரர் கிளைன் மேக்ஸ்வெல் இன்றைய ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கலாம்.

வெற்றிக்காக இரு அணி வீரர்களும் மல்லுக்கட்டுவார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பது உறுதி. இன்றைய ஆட்டத்திலும் மழையின் தாக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வருணபகவான் கருணை கொண்டு ஆட்டத்தை வழிநடத்த வேண்டும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு :

இந்தியா :ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், சூர்யகுமார் யாதவ், ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ்

ஆஸ்திரேலியா :ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மேத்யூ ஷார்ட், டேவிட் வார்னர், மார்னஸ் லாபுஷாக்னே, ஜோஷ் இங்கிலிஸ், கேமரூன் கிரீன், சீன் அபோட், ஆடம் ஜம்பா, ஜோஷ் ஹேசில்வுட், தன்வீர் சங்கா, மார்கஸ் ஸ்டோனிஸ், பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், கிளைன் மேக்ஸ்வெல் , மிட்செல் மார்ஷ்

இதையும் படிங்க :குதிரையேற்றப் போட்டியில் 41 ஆண்டுகளுக்குப் பின் தங்கம் வென்று இந்தியா சாதனை - பிரதமர் மோடி பாராட்டு!

ABOUT THE AUTHOR

...view details