இந்தூர் :இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மத்திய பிரதேச மாநிலம் இந்ரில் இன்று (செப். 24) நடைபெறுகிறது. இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி பஞ்சாப், மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் நடைபெற்றது. இந்திய அணியில் சீனியர் வீரர்கள் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் உள்ளிட்டோருக்கு ஓய்வு அளிக்கப்பட்ட நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி எதிர்கொண்டது.
அபாரமாக விளையாடிய இந்திய வீரர்கள் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றனர். இந்திய பந்துவீச்சாளர்கள் ஆஸ்திரேலிய அணியை 276 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர். இதில் முகமது ஷமி 5 விக்கெட்டுகள் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து இருந்தார்.
இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று (செப். 24) இந்தூர் மைதானத்தில் நடைபெறுகிறது. முதல் போட்டியில் கண்ட தோல்விக்கு பழிதீர்க்க இன்றைய ஆட்டத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் வெறி கொண்ட வேங்கை போல் செயல்படுவார்கள் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
இந்திய மைதானங்களின் ஆடுகள தன்மையை நன்கு அறிந்தவர்கள் ஆஸ்திரேலிய வீரர்கள். அதனால் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணிக்கு கடும் நெருக்கடி கொடுப்பார்கள். டேவிட் வார்னர். ஸ்டீவன் சுமித் உள்ளிட்டோர் நிலைத்து நின்று விளையாடும் பட்சத்தில் ஆஸ்திரேலிய அணி அசால்ட்டாக 300 ரன்களுக்கு மேல் எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆட்டத்தில் கண்ட தோல்விக்கு பிராயச்சித்தம் தேடும் வகையில் அணியில் சில மாற்றங்களை மேற்கொண்டு ஆஸ்திரேலிய அணி கட்டாயம் களமிறங்கும்.
எனவே கடந்த ஆட்டத்தின் வெற்றியை வீரர்கள் மனதில் கொள்ளாமல், புதிதாக ஆஸ்திரேலிய அணியை எதிர்கொள்ளப் போகிறோம் என எண்ணி விளையாட வேண்டும். வேகப்பந்து வீச்சில் முகமது ஷமி மற்றும் முகமது சிராஜ் ஆகியோர் நல்ல பார்மில் உள்ளனர். சுழற்பந்து வீச்சு அணியில் எந்த நிலையில் இருக்கிறது என்பதில் சந்தேகம் நிலவுகிறது.