ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள், மூன்று டி20 போட்டிகள் தொடரில் பங்கேற்கவுள்ளது. இதன் முதல் போட்டி நவ. 27ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், போட்டிக்கான எதிர்பார்ப்பு இப்போதே எகிறியுள்ளது.
இந்தத் தொடர் குறித்து ஆஸ்திரேலிய அணியின் கிளென் மேக்ஸ்வெல் கூறுகையில், ''ரோஹித் ஷர்மா சர்வதேச கிரிக்கெட்டில் கிளாஸிக் வீரர். தொடக்க வீரராக களமிறங்க தொடர்ந்து கன்சிஸ்டன்ட்டாக ரன்கள் சேர்க்கக் கூடியவர். அதனால் அவர் எங்களுக்கு எதிரான தொடரில் ஆடவில்லை என்றால், அது சாதகமானதுதான்.
ஆனால் அவர் இல்லை என்றாலும், இந்திய அணி அவருக்கான சரியான மாற்று வீரரை தன்னகத்தில் கொண்டுள்ளது. கே.எல். ராகுல் ரோஹித்தின் இடத்தை நிச்சயம் நிரப்புவார். ஐபிஎல் தொடரின்போது எப்படி ஆடினார் என்பதை அனைவரும் பார்த்திருக்கிறோம். தொடக்க வீரராக களமிறங்குகிறாரா அல்லது மிடில் ஆர்டரில் களமிறங்குகிறாரா என்பது தெரியாது. ஆனால் அவர் நிச்சயம் சிறந்த வீரர்தான்'' என்றார்.
ரோஹித் ஷர்மா அணியில் சேர்க்கப்படாததால், தொடக்க வீரராக மயாங்க் அகர்வால் களமிறங்குவார் எனத் தெரிகிறது. அதேபோல் கே.எல். ராகுல், மயாங்க் அகர்வால் ஆகியோருடன் கிங்ஸ் லெவன் அணிக்காக மேக்ஸ்வெல் ஆடினார்.
அதைப்பற்றி அவர் கூறுகையில், ''மயாங்க் - ராகுல் இருவரும் நான் சந்தித்த சிறந்த நண்பர்கள். அவர்களைப் போல் நான் வேறு யாரையும் சந்தித்ததே இல்லை. அவர்களுடன் ஓய்வறையை பகிர்ந்தது மறக்க முடியாத அனுபவம். அவர்களால் மைதானத்தின் அனைத்து திசைகளிலும் ரன்கள் சேர்க்க முடியும். அதேபோல் அவர்களுக்குப் பேட்டிங்கில் பனவீனம் என்பது மிகவும் குறைவு.