ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின்னர், ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர், நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆகியவற்றில் ஆடவுள்ளது.
இதற்கான இந்திய அணி சென்ற மாதம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காயம் காரணமாக சில வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை இன்று பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில், இந்திய கேப்டன் விராட் கோலி - அனுஷ்கா ஷர்மா இணைக்கு குழந்தைப் பிறக்கவுள்ளதால், அடிலெய்ட் டெஸ்ட் உடன் நாடு திரும்பவுள்ளார். அதேபோல் ரோஹித் ஷர்மாவின் காயம் முழுமையாவதற்காக டி20 மற்றும் ஒருநாள் தொடர்களிலிருந்து ஓய்வளிக்கப்பட்டுள்ளது. பின்னர் டெஸ்ட் தொடரில் ரோஹித் பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒருநாள் போட்டிகளுக்கான இந்திய அணியில் கூடுதல் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இணைக்கப்பட்டுள்ளார். இஷாந்த் ஷர்மாவின் காயம் குணமடைந்த பின்னர் டெஸ்ட் அணியில் சேர்க்கப்படுவார்.
தமிழ்நாடு வீரர் வருண் சக்கரவர்த்திக்கு தோளில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக ஆஸ்திரேலிய தொடரிலிருந்து விலகியுள்ளார். இவருக்கு பதிலாக நடராஜன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். டெஸ்ட் அணியின் விக்கெட் கீப்பர் சஹாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஆஸ்திரேலிய தொடரில் பங்கேற்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
இந்திய அணியின் நெட் பவுலராக தேர்வு செய்யப்பட்ட கமலேஷ் நகர்கோட்டி, மருத்துவக் குழுவினரிடன் சிகிச்சைப் பெற்று வருவதால், இவர் ஆஸ்திரேலியாவுக்கு பயணம் செய்யமாட்டார் என கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:2 ஓவர்களில் ஆட்டத்தை மாற்றிய ராதா யாதவ்; சூப்பர்நோவாஸிற்கு 119 ரன்கள் இலக்கு!