ஆஸ்திரேலியாவில் சுற்றப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளிலும் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து தொடரை இழந்தது.
இந்த நிலையில் மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலிய தலைநகரான கான்பெர்ராவில் உள்ள மனுகா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்து முதலில் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் ஆறுதல் வெற்றியை பெறவேண்டும் என்ற முனைப்பில் இந்திய அணி களமிறங்கியுள்ளது. அதேசமயம் இந்திய அணியை இந்த தொடரில் ஒயிட் வாஷ் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்தில் ஆஸ்திரேலிய அணி தீவிரம் காட்டும் என தெரிகிறது.
முதல் இரண்டு போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் இருந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் இன்றைய போட்டியில் இந்திய அணியின் ஆடும் லெவனில் இடம்பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரில் தனது அபார பந்து வீச்சால் பேட்ஸ்மேன்களை திணற வைத்த அவர், பலம் வாய்ந்த ஆஸ்திரேலிய வீரர்களை தனது பந்து வீச்சால் திணறடிப்பாரா என கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். காயம் காரணமாக முகம்மது ஷமிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.