ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிரான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு அணி தோல்வியடைந்ததையடுத்து, பெங்களூரு அணியின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தது. இதையடுத்து நேற்று இரவு ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்காக இந்திய வீரர்களுக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள பயோ பபுள் சூழலுக்கு விராட் கோலி திரும்பியுள்ளார்.
அதனால் ஓரிரு நாள்களில் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திற்கான பயிற்சியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது. ஏற்கனவே மயாங்க அகர்வால், கேஎல் ராகுல், புஜாரா, ஹனுமா விஹாரி, ஐபிஎல் பயணம் முடிந்த இந்திய வீரர்கள் ஆகியோர் பயோ பபுள் சூழலுக்கு திரும்பிவிட்டனர்.
அதேபோல் ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டிக்குத் தயாராகும் விதமாக இரவு நேரங்களில் பயிற்சி செய்யும் இந்திய வீரர்கள், பிங்க் நிறப் பந்துகளை பயன்படுத்திவருகின்றனர்.
ஐபிஎல் தொடர் முடிவடைந்த பின் வரும் நவ. 12ஆம் தேதி இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்குச் செல்லவுள்ளது. அங்கு 14 நாள்கள் தனிமைப்படுத்தப்பட்ட பின், பயிற்சியில் ஈடுபடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ரோஹித் ஷர்மாவின் உடல்நிலையைப் பொறுத்தே ஆஸ்திரேலிய தொடருக்குத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:வார்னர் விக்கெட் சர்ச்சை - சர்காஸம் செய்த ஸ்காட் ஸ்டைரிஸ்!