இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2ஆவது ஒருநாள் போட்டி சிட்னி மைதானத்தில் நடந்தது. இதில் டாஸ் வென்ற ஆஸி. அணி கேப்டன் ஆரோன ஃபின்ச் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய ஆஸி. அணியில் அனைத்து வீரர்களும் சிறப்பாக ஆட, 50 ஓவர்களில் 389 ரன்கள் எடுத்தனர். இதையடுத்து இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தவான் - அகர்வால் இணை தொடக்கம் கொடுத்தனர்.
இந்த இணை முதல் விக்கெட்டுக்கு அதிரடியாக ஆடி 58 ரன்களை சேர்த்தது. அப்போது தவான் 30 ரன்களிலும், அகர்வால் 28 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர். பின்னர் விராட் கோலி - ஸ்ரேயாஸ் இணை நிதானமாக ரன்கள் சேர்த்தது.
இவர்களின் பார்ட்னர்ஷிப் 93 ரன்களை எடுக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய அணியின் முக்கியமான மூன்று வீரர்கள் நல்ல தொடக்கம் கிடைத்தும் பெரிய ஸ்கோரை அடிக்காமல் ஆட்டமிழந்து இந்திய அணி பெரும் பின்னடைவாக அமைந்தது.
இதையடுத்து விராட் கோலி - ராகுல் இணை சேர்ந்து ஸ்கோரை உயர்த்த தொடங்கியது. இதனிடையே விராட் கோலி அரைசதம் கடந்தார். 30 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 186 ரன்களை எடுத்தது.
இதையடுத்து 20 ஓவருக்கு 205 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் விராட் கோலி - ராகுல் இணை அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தனர். இதனால் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட கோலி, ஹென்ரிக்ஸின் அபாரமான கேட்ச்சால் 89 ரன்களுக்கு வெளியேறினார்.