ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-0 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியுள்ளது. இந்த இரு போட்டிகளிலும் இந்திய அணியின் பந்துவீச்சு பெரிய அளவில் இல்லை. இதற்கு முழுமையான காரணம் கேப்டன் விராட் கோலிதான் என முன்னாள் இந்திய வீரர் கம்பீர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், '' உண்மையை சொல்ல வேண்டுமென்றால் எனக்கு அவரின் கேப்டன்சி யுக்திகள் எதுவும் புரியவில்லை. நாம் அனைவருக்கும் விக்கெட்டுகள் வீழ்த்துவது எவ்வளவு முக்கியம் என்பது தெரியும். அதிலும் ஆஸ்திரேலியா மாதிரியான அணியின் பேட்டிங் வரிசையை வைத்து பார்த்தால், சீரான இடைவெளியில் விக்கெட் வீழ்த்தினால்தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். அப்படி விக்கெட் வீழ்த்த வேண்டுமென்றால், நம்முடைய முக்கிய பந்துவீச்சாளரை சரியாக பயன்படுத்த வேண்டும்.
சாதாரணமாக ஒருநாள் போட்டிகளில் 4-3-3 என்ற கணக்கில்தான் ஸ்பெல்கள் கொடுக்கப்படும். ஆனால் விக்கெட் விழாத நேரங்களிலும் விராட் கோலி பும்ராவை இரண்டு ஓவர்களோடு தடுத்துவிட்டார். அது ஏன் என்று இப்போதுவரை புரியவில்லை. அவரின் கேப்டன்சியை புரிந்துகொள்ளவும் முடியவில்லை. இது டி20 கிரிக்கெட் அல்ல. இந்தப் போட்டியில் நாம் தோல்வியடைந்ததற்கு விராட் கோலியின் கேப்டன்சிதான் காரணம்.