ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் வென்று இந்திய அணி வரலாற்று சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இந்திய அணி வீரர்கள் தாயகம் திரும்பியுள்ளனர். இன்று காலை ஹைதராபாத் விமான நிலையம் வந்தடைந்த இந்திய அணி வீரர்கள் முகமது சிராஜ், ஹனுமா விகாரிக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிட்னியில் நடைபெற்ற 3ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் அஸ்வினுடன் ஜோடி சேர்ந்த ஹனுமா விகாரி பொறுப்புடன் விளையாடி போட்டியை டிரா செய்தார். 161 பந்துகளை எதிர்கொண்ட அவர் 23 ரன்களை எடுத்தார். ஒருவேளை விக்கெட்டுகளை இழந்திருந்தால் அந்தப் போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்திருக்கும்.
ஆஸ்திரேலியா அணிக்கெதிரான சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான முகமது சிராஜ், 4ஆவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் தனது அபார பந்துவீச்சால் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். தனது தந்தை இறந்த தருவாயிலும் கூட அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் நாட்டிற்காக விளையாட வேண்டும் என ஆஸ்திரேலியாவிலேயே தங்கி இருந்தார்.
முகமது சிராஜ் வீட்டு முன்பு குவிந்த ரசிகர்கள் இத்தொடரின் மூன்று போட்டிகளில் விளையாடிய சிராஜ், தனது அபார பந்துவீச்சினால் 13 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்திய அணி தொடரை கைப்பற்றுவதற்கு உறுதுணையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து பிப்ரவரி மாதம் தொடங்க உள்ள இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முகமது சிராஜ் பங்கேற்க உள்ளார்.