இந்தூர்:டாம் லாதம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் 20 ஓவர் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. ஐதராபாத்தில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 12 ரன்களிலும், ராய்ப்பூரில் நடந்த 2-வது போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்திலும் இந்திய அணி வென்று தொடரை 2-க்கு 0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
இந்நிலையில், மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, சுப்மான் கில் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
நியூசிலாந்து வீரர்களின் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்ட இருவரும் ஏதுவான பந்துகளை எல்லைக் கோட்டிற்கு அனுப்பி ரன் சேகரிப்பில் ஈடுபட்டனர். 25 ஒவர்களை தாண்டி நிலைத்து நின்று ஆடிய ரோகித் சர்மா தனது 30 சதத்தை பூர்த்தி செய்தார். சதம் அடித்த கையோடு ரோகித் சர்மா, பிரெஸ்வெல் பந்து வீச்சில் போல்டாகி வெளியேறினார்.
மறுபுறம் இரட்டை சதம் நாயகன் சுப்மான் கில் மீண்டும் ஒரு சர்வதேச சதத்தை பதிவு செய்தார். 112 ரன்கள் குவித்த சுப்மான் கில், பிளேர் டிக்னர் பந்து வீச்சில் கான்வாயிடம் கேட்ச்சாகி அவுட்டானார். தொடர்ந்து இந்திய அணியில் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தன.