மும்பை : இங்கிலாந்து மகளிர் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் மற்றும் ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொண்ட தொடரில் விளையாடியது. முதலில் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்ற நிலையில், முதல் இரண்டு டி20 கிரிக்கெட் போட்டிகளில் இங்கிலாந்து மகளிர் அணி முறையே 38 ரன்கள் மற்றும் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மூன்றாவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒரேயொரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 14ஆம் தேதி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய் பாட்டீல் ஸ்போர்ட்ஸ் அகாடமி மைதானத்தில் தொடங்கியது.
டாஸ் வென்ற இந்திய மகளிர் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்திய மகளிர் அணி முதல் இன்னிங்சில் 104 புள்ளி 3 ஓவர்களுக்கு 428 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக சுபாஷ் சதீஷ் 69 ரன்கள் எடுத்தார். மற்ற வீராங்கனைகள் ஜேமியா ரோட்ரிக்ஸ் 68 ரன், விக்கெட் கீப்பர் யஷ்டிகா பாட்யா 66 ரன், தீப்தி ஷர்மா 67 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய இங்கிலாந்து மகளிர் அணியில் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு யாரும் பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிகபட்சமாக நாட் ஸ்கவர் பிரன்ட் மட்டும் 59 ரன்கள் சேர்த்தார். டெனியல் வியாட் 19 ரன், விக்கெட் கீப்பர் ஏமி ஜோன்ஸ் 12 ரன்கள் எடுத்தனர்.
மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். 35 புள்ளி 3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 136 ரன்களுக்கு சுருண்டது. இந்திய மகளிர் அணி தரப்பில் வீராங்கனை தீப்தி ஷர்மா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். ஸ்னே ரானா 2 விக்கெட்டும், பூஜா வஸ்ட்ரகர், ரேனுகா சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
292 ரன்கள் முன்னிலையுடன் இந்திய மகளிர் அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது. அபாரமாக விளையாடிய இந்திய தொடக்க வீராங்கனைகள் ஷாபாலி வர்மா (33 ரன்), ஸ்மிரிதி மந்தனா (26 ரன்) முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தனர். சீரான இடைவெளியில் இந்திய அணிக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகள் வீழ்ந்த வண்ணம் இருந்தாலும் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் (44 ரன்) நிலைத்து நின்று விளையாடி அணி 150 ரன்களை கடக்க உதவினார்.