கேப் டவுன்:தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, தற்போது 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது போட்டி கேப் டவுன் நியூலேன்ட்ஸ் மைதானத்தில் இன்று (ஜன.03) தொடங்கியது.
இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி கேப்டன் டீன் எல்கர், பேட்டிங்கை தேர்வு செய்தார். அதன்படி, முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி, இந்திய பந்து வீச்சாளர்களைச் சமாளிக்க முடியாமல் திணறியது.
சிறப்பான பந்து வீச்சு:தென் ஆப்பிரிக்கா அணியில் கேப்டன் டீன் எல்கர் -எய்டன் மார்க்ரம் ஜோடி தொடக்க வீரர்களாக களமிறங்கிய நிலையில், 2 ரன்கள் எடுத்த எய்டன் மார்க்ரம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். மற்றொரு தொடக்க வீரரான டீன் எல்கர், சிராஜ் பந்துவீச்சில் சிக்கி 4 ரன்னில் அவுட் ஆனார்.
பின்னர் களமிறங்கிய அனைத்து பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க, 23.2 ஓவர்களில் 55 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் தென் ஆப்பிரிக்க அணி எடுத்த 7வது குறைவான ஸ்கோர் இதுவாகும். இந்திய அணி தரப்பில் பந்துவீச்சில் மிரட்டிய சிராஜ் 6 விக்கெட்டுகளையும், பும்ரா மற்றும் முகேஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
மோசமான பேட்டிங்:இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரரான யாஷஸ்வி ஜெய்ஸ்வால் டக் அவுட் ஆகி வெளியேற, ரோகித் சர்மா - சுப்மன் கில் கூட்டணி நிலைத்து நின்று, அணியில் ஸ்கோரை உயர்த்தினர்.