ஜோகன்னஸ்பர்க்: தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, தலா மூன்று போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் கிரிக்கெட் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன்படி, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி கடந்த டிசம்பர் 10ஆம் தேதி டர்பனில் நடைபெற இருந்தது.
ஆனால், அப்போது பெய்த தொடர் கனமழை காரணமாக டாஸ் கூட போடப்படாமல் அந்த ஆட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 கிரிக்கெட் போட்டி, கடந்த டிசம்பர் 12 அன்று கெபெர்ஹாவில் நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் இந்தியா பேட்டிங் செய்து கொண்டிருக்கையில் மழை குறுக்கிட்டது.
இதனால், 19.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 180 ரன்களை குவித்திருந்த நிலையில், ஆட்டம் முடிவடைவதாக அறிவிக்கப்பட்டது. மேலும், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, தென் ஆப்பிரிக்க அணிக்கு 15 ஓவர்களில் 152 ரன்கள் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதன்படி களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, 13.5 ஓவரிலேயே 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால், 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்க அணி முன்னிலை பெற்றிருந்தது. இந்த நிலையில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான 3வது மற்றும் கடைசி டி20 போட்டி ஜோகன்னஸ்பெர்க்கில் நேற்று (டிச.14) நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.