டெல்லி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையே 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கடந்த 17ஆம் தேதி டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் அந்த அணி 263 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அதிகபட்சமாக உஸ்மான் கவாஜா 81 ரன்களும், ஹேண்ட்ஸ் கோம்ப் 72 ரன்களும் எடுத்தனர். பின்னர் களம் இறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 262 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
இதைத் தொடர்ந்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய (பிப்.18) ஆட்ட நேர முடிவில் அந்த அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்களை எடுத்தது. இந்நிலையில் இன்று (பிப்.19) 3ம் நாள் ஆட்டம் தொடங்கியது. இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணியின் விக்கெட்கள், சீட்டுக்கட்டுக்களை போல சரிந்தது. ஹெட் 43, லபுஷேன் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்கள் ஒற்றை இலக்க ரன்களில் வெளியேறினர். முடிவில் ஆஸ்திரேலிய அணி 113 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 7 விக்கெட்களை எடுத்தார்.