அகமதாபாத் : குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் வீரர்கள் தீவிர வலை பயிற்சி மேற்கொண்டு உள்ளனர்.
13வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நாட்டின் 10 நகரங்களில் நடைபெற்று வருகிறது. நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இலங்கை, வங்கதேசம், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.
கிரிக்கெட்டின் ஹை வோல்டேஜ் எனப்படும் இந்தியா பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி நாளை குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறுகிறது. இதையடுத்து, இந்தியா, பாகிஸ்தான் வீரர்கள் அகமதாபாத் நகருக்கு விரைந்தனர்.
போட்டியை முன்னிட்டு இரு அணி வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அணி தனது கடைசி ஆட்டத்தில் இலங்கையை வென்றதை அடுத்து அதீத நம்பிக்கையுடன் உள்ளது. அதேநேரம் உலக கோப்பை கிரிக்கெட்டில் பாகிஸ்தானிடம் ஒரு முறை கூட இந்திய அணி தோற்றது கிடையாது.
அந்த சாதனையை தக்கவைக்கும் விதமாக இந்திய வீரர்களும் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்திய அணியில் விராட் கோலி, கேப்டன் ரோகித் சர்மா நல்ல பார்மில் உள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பில் இருந்து மீண்டு வந்து உள்ள தொடக்க வீரர் சுப்மான் கில்லும் அகமதாபாத் விரைந்து உள்ளார்.
அவரும் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் இணையும் பட்சத்தில் அணிக்கு கூடுதல் பலமாக காணப்படுகிறது. கடந்த 2021ஆம் ஆண்டு உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணியை டக்வொர்த் லிவீஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.
அதைத் தொடர்ந்து இன்றைய ஆட்டத்திலும் வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். வெற்றிக்காக இவ்விரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சம் இருக்காது என்பது நிதர்சனமான உண்மை. இந்திய அணிக்கு முன்னதாகவே அகமதாபாத் விரைந்த பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க :New Zealand Vs Bangladesh : நியூசிலாந்து - வங்கதேசம் யாருக்கு வெற்றி? சென்னை மெட்ரோ ரயில் முக்கிய அறிவிப்பு!