கவுகாத்தி : இந்திய - ஆஸ்திரேலிய இடையேயான டி20 தொடரின் 3வது போட்டி இன்று (நவம்பர் 28) கவுகாத்தி பர்சபரா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி பேட் செய்ய களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் மற்றும் ருத்ராஜ் கெய்க்வாட் விளையாடினார்.
கடந்த போட்டியில் நல்ல தொடக்கத்தை கொடுத்த ஜெய்ஸ்வால் இப்போட்டியில் களத்தில் நீண்ட நேரம் நீடிக்கவில்லை. பெஹ்ரன்டோர்ஃப் பந்து வீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களம் புகுந்த இஷான் கிஷன் டக் அவுட் ஆக, கெய்க்வாட்டுடன் - சூர்யகுமார் யாதவ் கைக்கோர்த்தார்.
இந்த ஜோடி சிறுது நேரம் அணிக்கு ரன்களை சேர்த்து வந்தது. ஒரு பக்கம் விக்கெட்கள் சரிந்தாலும், கெய்க்வாட் ஆஸ்திரேலிய அணியின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 29 பந்துகளில் 2 சிக்சர்கள், 5 ஃபோர்கள் உட்பட 39 ரன்கள் எடுத்த சூர்யகுமார் யாதவ் ஆரோன் ஹார்டி பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
மறுபக்கம் தொடர்ந்து அதிரடி காட்டிய கெய்க்வாட் சதம் விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார். 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்கள் இழப்பிற்கு 222 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான கெய்க்வாட் 123 ரன்களுடனும், திலக் வர்மா 31 ரன்களுடனும் களத்தில் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.