மொஹாலி(பஞ்சாப்): இலங்கை அணி இந்தியாவுக்குத் தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்திய அணி முழுமையாக கைப்பற்றிய நிலையில், டெஸ்ட் தொடர் நேற்று முன்தினம் (மார்ச் 4) தொடங்கியது.
இது விராட் கோலியின் 100ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இப்போட்டி இலங்கை அணியின் 300ஆவது சர்வதேச டெஸ்ட் போட்டி என்பது நினைவு கூரத்தக்கது.
ராக் ஸ்டார் ஜட்டு
போட்டியின் டாஸை வென்ற இந்திய அணி பேட்டிங்கைத் தேர்வுசெய்தது. அதன்படி, களமிறங்கிய ஒன்றரை நாள்கள் விளையாடி (129.2 ஓவர்கள்) இந்திய அணி, 574 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 175 ரன்களும், ரிஷப் பந்த் 96 ரன்களும், ரவிச்சந்திரன் அஸ்வின் 61 ரன்களும், ஹனுமா விஹாரி 58 ரன்களும் எடுத்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விராட் கோலி 45 ரன்களை மட்டும் எடுத்து ஏமாற்றமளித்தார்.
இலங்கை பந்துவீச்சு தரப்பில், லக்மல், பெர்னாண்டோ, எம்புல்தெனியா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய இலங்கை அணி இரண்டாம் நாளான நேற்றைய (மார்ச் 6) ஆட்டநேர முடிவில், 108 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மேலும், இலங்கை 466 ரன்கள் பின்னடைவில் இருந்தது.
மூன்றாம் நாள் ஆட்டம்
இந்நிலையில், பதும் நிசங்கா 26 ரன்களுடனும், அசலங்கா 1 ரன்னுடனும் மூன்றாம் நாள் (மார்ச் 6) ஆட்டத்தைத் தொடங்கினர். இருவரும் நிலைத்து நின்று ஆடிவந்த நிலையில், நிசங்கா அரைசதம் அடித்தார். இந்த ஜோடி 58 ரன்களை சேர்த்தபோது, அசலங்கா 29 ரன்களில் பும்ராவிடம் வீழ்ந்தார்.
இதன்பின்னர், இலங்கையின் விக்கெட்கள் மடமடவென விழத்தொடங்கின. அசலங்கா 58ஆவது ஓவரில் வெளியேறிய நிலையில், அடுத்த 7 ஓவர்களில் இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. டிக்வெல்லா மட்டுமே 2 ரன்களை சேர்த்தார். அவரைத் தொடர்ந்து வந்த லக்மல், எம்புல்தெனியா, பெர்னாண்டோ, லஹிரு குமார் ஆகிய அனைவரும் ரன்னேதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.
இதனால், 174 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல்-அவுட்டானது. ஜடேஜா 5 விக்கெட்டுகளையும், அஸ்வின், பும்ரா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
இலங்கை ஃபாலோ-ஆன்
இலங்கைக்கு இந்திய அணி ஃபாலோ-ஆன் கொடுத்தது. இதையடுத்து, 400 ரன்கள் பின்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இலங்கை அணிக்கு மீண்டும் அதிர்ச்சி காத்திருந்தது. ஓப்பனர் லஹிரு திரிமன்னே ரன்னேதுமின்றி வெளியேறினார்.
மதிய இடைவேளைக்கு முன்பு வரை (4 ஓவர்கள்), இலங்கை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 10 ரன்கள் எடுத்திருந்தது. இடைவேளைக்குப் பின்னர், இலங்கை அணி ரன் எடுக்கும் வேகத்தை அதிகப்படுத்தியது. இருப்பினும், மறுமுனையில் விக்கெட்டுகளும் சரிந்தன. நிசங்கா 6, கருணாரத்னே 27 என வெளியேற அனுபவ வீரர் மாத்யூஸ், தனஞ்ஜெயா உடன் இணைந்தார்.
இந்த இணை 49 ரன்களை எடுத்தபோது, தனஞ்ஜெயா 30 ரன்களில் பெவிலியன் திரும்பினார். இதன்மூலம், தேநீர் இடைவேளை வரை (35 ஓவர்கள்), இலங்கை 120 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து 280 ரன்கள் பின்தங்கியிருந்தது.
கபில்தேவை முந்திய அஸ்வின்
தோல்வி முகத்தில் இருந்தாலும், இந்த ஒரு செஷனாவது இலங்கை தாக்குபிடிக்குமா என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தேநீர் இடைவேளைக்குப் பின்னரான முதல் இரண்டு ஓவர்களில் அசலங்கா 20 ரன்களிலும், மாத்யூஸ் 28 ரன்களிலும், லக்மல் ரன்னேதும் இன்றியும் வெளியேற ஆட்டம் சூடுபிடித்தது.
மேலும், அஸ்வின் அசலங்கா விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் தனது 435ஆவது சர்வதேச டெஸ்ட் விக்கெட்டை பதிவுசெய்தார். இதன்மூலம், அதிக டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய இந்தியர்களில் முன்னாள் இந்திய கேப்டன் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி, அஸ்வின் இரண்டாவது இடத்திற்கு முன்னேறி உள்ளார். இந்தப் பட்டியலில் அனில் கும்ப்ளே 619 விக்கெட்டை வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
வெறி காட்டிய அஸ்வின் - ஜடேஜா ஜோடி
இதன்பின்னர், டிக்வெல்லா உடன் சிறிது நேரம் தாக்குபிடித்த எம்புல்தெனியா 42 பந்துகளில் 2 ரன்களை சேர்த்து வெளியறினார். அடுத்துவந்த பெர்னாண்டோ டக் அவுட்டானார். நீண்டநேரம் விளையாடி வந்த டிக்வெல்லா அரைசதம் கடந்த நிலையில், குமாரா 4 ரன்களில் அஸ்வின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, இலங்கை அணி 178 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.
இதன்மூலம், இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி, இரண்டு போட்டிகள் கொண்டத் தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்திய அணி பந்துவீச்சில் ஜடேஜா, அஸ்வின் ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளையும், ஷமி இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்.
அடுத்தது பகலிரவு ஆட்டம்
காயத்திலிருந்து மீண்டு வந்த ஜடேஜா பேட்டிங்கில் 175 ரன்களையும், பந்துவீச்சில் மொத்தம் 9 விக்கெட்டுகளையும் எடுத்து போட்டியின் சிறந்த வீரராக தேர்வுசெய்யப்பட்டார்.
இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி மார்ச் 12ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டி பகலிரவு முறையில் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ICC Women's World Cup 2022: பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா; அசத்திய பூஜா வஸ்த்ரகர்!