டொமினிகா: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 12ஆம் தேதி டொமினிகாவில் உள்ள விண்ட்சர் பார்க் மைதானத்தில் வைத்து நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதல் இன்னிங்ஸில் 150 ரன்கள் மட்டுமே எடுத்து வெஸ்ட் - இண்டீஸ் ஆட்டமிழந்தது. அலீக் அதானஸி 47 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ரன்னாக அமைந்தது. இந்திய அணி தரப்பில் அஸ்வின் 5 விக்கெட்டுகளும், ஜடேஜா 3 விக்கெட்களும் எடுத்தனர்.
அதன் பின் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி ரோகித் - ஜெய்ஸ்வால் கூட்டணி அபாரமாக விளையாடி 229 ரன்கள் சேர்த்த நிலையில் பாட்னர்ஷிப் பிரிந்தது. ரோகித் சர்மா 10 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 103 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷுப்மன் கில் வந்த வேகத்தில் 6 ரன்களுக்கு வெளியேரினார்.
இதனை அடுத்து களம் கண்ட கோலி தனது சிறப்பான ஆட்டத்தை ஜெய்ஸ்வாலுடன் தொடர்ந்தார். அறிமுக ஆட்டத்தில் தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜெய்ஸ்வால் 16 பவுண்டரிகளும், 1 சிக்ஸர் உடன் 387 பந்துகளில் 171 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
ரஹானே 3 ரன்களுக்கு வெளியேற, ஜடேஜா - கோலி இணை பொறுமையாக விளையாடியது. கோலி 5 பவுண்டரிகளுடன் 76 ரன்களுக்கு ஆட்டமிழக்க, இந்திய அணி 421 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டிக்ளர் செய்தது. ஜடேஜா 37 ரன்கள், இஷான் கிஷன் 1 ரன்களுடன் ஆட்டமிழக்கமால் இருந்தனர்.